அபிராமி தாயாரின் அற்புத தரிசனம்

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு ...


திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடுகள் நடத்திவந்த அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க அய்யருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் பிறந்தார் பின்னாளில் அவர்தான் அபிராமி பட்டராக மாறினார்.

அமிர்தலிங்க அய்யர் தம் மகன் அபிராமி பட்டருக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரையான தேவி உபாசனையும் அறியச் செய்தார். அபிராமிபட்டர் சிறுவயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார்.

அவர் தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் உள்ளத்தில் அபிராமி அன்னையின் மீது தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார்.

அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன், கிறுக்கன் என்று அவரை கேலியும் கிண்டலும் செய்தனர்.

யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அபிராமிபட்டர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் அம்பாள் திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச்சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார்.

கோயிலுக்கு வரும் அனைத்து பெண்களையுமே அபிராமியின் அம்சமாகவே அவர் எண்ணி வழிபடுவார் அவரது ஞானக் கண்களுக்கு அந்தப் பெண்கள் அபிராமி அம்சமாகவே தோன்றினார்கள் ஆனால் மக்களோ அபிராமி பட்டரை தினம் தினம் கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படிப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று கூட சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.

அபிராமி பட்டரோ அதைக் காதில் வாங்கவில்லை. யாரையும் கண்டு கொள்ளவும் இல்லை. அபிராமியைத் துதிப்பதும், அவளைப் பற்றி துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார். தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறுவார். பிறகு அந்த திதிக்கு ஏற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அபராமி பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும்.
இந்தப் பித்தனின் புகழை ஊரறிய, உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டாள் அன்னை அபிராமி!

அதற்கான நாளும் நெருங்கியது. ஒரு நாள் தை அமாவாசை தினத்தன்று தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி (1675-1728) புரிந்து வந்த மராட்டிய மன்னர் சரபோஜி பூம்புகார் சென்று கடலில் நீராடினார். பிறகு அவர் திருக்கடவூருக்கு அமிர்தகடேசுவரரையும் அபிராமியையும் தரிசனம் செய்ய வந்தார்.

மன்னனைக் கண்டதும் மக்கள் வரவேற்று உபசரித்து வணங்கினார்கள் ஆனால் அபிராமிபட்டர் மன்னர் வந்திருப்பது அறியாமல், மன்னரை வணங்காமல் தனக்குள் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருந்தார். மன்னர், இவர் யார் எனக் கேட்டார், சுற்றி இருந்தவர்கள் மன்னரிடம், மன்னா இவர் பெயர் அபிராமிபட்டர். தினமும் பைத்தியம் பிடித்தவர் போல நடந்து கொள்கிறார். தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை கூட வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று புகார் கூறினார்கள். ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.

இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் சரபோஜி மன்னர் அதைச் சோதிக்க எண்ணினார். புறநினைவு சற்றுமின்றி, தன்னுள்ளே அன்னையைக் கண்டு பரவச நிலையில் அமர்ந்திருந்த அபிராமி பட்டரிடம் நெருங்கி சென்று இன்று என்ன திதி? என்று கேட்டார்.

மன்னரின் வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி மட்டுமே எண்ணி யோக நிலையிலேயே கோடி சூர்யப் பிரகாசமாய் அன்னையைத் தன் மணக்கண்ணில் கண்டுகளித்திருந்த அபிராமிபட்டர் சற்றும் தாமதிக்காமல், இன்று பவுர்ணமி திதி” என்றார். உண்மையில் அன்று அமாவாசை. அதை நினைத்தபடி சரயோஜி மன்னர் அப்படியென்றால் இன்று இரவு பவுர்ணமி நிலவு வருமா? என கேட்டார். அதற்கு அபிராமிபட்டர் நிச்சயம் வரும் என கண்மூடிய நிலையில் கூறினார்.

சரபோஜி மன்னருக்கு கோபம்பொத்துக்கொண்டு வந்தது இன்று இரவு பவுர்ணமி நிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை என்றார் இது அரசகட்டளை என்று கூறி விட்டு மன்னர் சென்றார் அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை எல்லாம் மற்றவர்கள் மூலம் கேட்டு உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் கவலைப்பட்டார்.

இந்த தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டினார். பிறகு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். 

அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்தார். பின்னர் அன்னையை நினைத்தப்படி அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.

உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் அந்தாதிப் பாடல்களை பாடத்தொடங்கினார் அபிராமி அந்தாதி மொத்தம் நூறு பாடல்கள் கொண்டது ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார் காலை போனது நண்பகல் சென்றது மாலையும் வந்தது பொழுது சாய்ந்தது; பட்டரின் நம்பிக்கை சாயவில்லை அமாவாசை என்பதால் வானம் இருண்டு உலகமே இருளில் மூழ்கி கிடந்தது.

ஆனால், அன்னையின் ஆசியால் நிலவு நிச்சயம் வரும் என்று அபிராமி பட்டர் நம்பினார் 78 பாடல்கள் பாடி முடிந்தது 78 கயிறும் அறுபட்டு விட்டது மிகுதியாக இருந்த கயிற்றில் உறியில் இருந்த வண்ணம் பட்டர் நம்பிக்கை இழக்காது பாடிக்கொண்டே இருந்தார். 

அபிராமிபட்டர் 79 வது பாடலாக அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு பழிபாவம் கொண்டு உழலும் மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில், ”விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு” என்ற பாடலைப் பாடினார். அதை பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள்.

தன் காதில் அணிந்திருந்த கம்மலை அன்னை அபிராமி கழற்றி எடுத்து வானவீதியில் வீசி எறிந்தாள். அந்த கம்மல் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடியது போல் ஒளியைப் பொழிந்தது. அவள் அபராமிபட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். 
அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் மகிழ்ந்தார். அபிராமிபட்டரைப் பற்றி பித்தன் என்று கூறியவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டனர்.

சரபோஜி மன்னர் அபிராமிபட்டருக்கு ஏராளமான மானியம் அளித்தார். அதற்கான பட்டயம் இன்றும் அபிராமி பட்டரின் வாரிசுகளிடம் உள்ளது.

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்...
அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…

100 விதமான பலன்கள் :
-------------------------------------------

அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலன் தருவதாகக் சொல்கிறார்கள். உதாரணமாக உதிக்கின்ற செங்கதிர் எனத் தொடங்கும் முதல் பாடல் நல்வித்தையும், ஞானமும் தரும் எனவும், நின்றும் இருந்தும் கடந்தும் எனத் தொடங்கும் 10-ஆம் பாடல் மோட்ச சாதனம் பெறவும், தண்ணளிக்கென்று முன்னே பலகோடி எனத்தொடங்கும் 15-ஆம் பாடல் பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறவும் உதவும் எனக்கூறப்படுகிறது. இப்படியே 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- 
1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம். 
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11.இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.                  
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.                  
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும்.                                     26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர் மரணம் வராமலிருக்கும்.                                     33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.                     
35. திருமணம் நிறைவேறும்.
36. பழைய வினைகள் வலிமை அழியும்.
37. நவமணிகளைப் பெறுவார்கள்.                    
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.                          
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.                                40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
41. நல்லடியார் நட்புப்பெறும்.
42. உலகினை வசப்படுத்தும்.
43. தீமைகள் ஒழியும்.
44. பிரிவுணர்ச்சி அகலும்.
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46.நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
47. யோகநிலை அடைவார்கள்.                                       48. உடல்பற்று நீங்கும்.
49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.
50. அம்பிகையை நேரில் காண முடியும்.                        
51. மோகம் நீங்கும்.
52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
53. பொய்யுணர்வு நீங்கும்.
54. கடன்தீரும். 
55. மோன நிலை கிடைக்கும்.
56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
57. வறுமை ஒழியும்.
58. மன அமைதி பெறலாம்.                              
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.                                          
60. மெய்யுணர்வு பெறலாம்.
61. மாயையை வெல்லலாம்.
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
64. பக்தி பெருகும்.                                         
65. ஆண்மகப்பேறு அடையலாம்.
66. கவிஞராகலாம்.                         
67. பகை வர்கள் அழிவார்கள்.
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
71. மனக்குறைகள் தீரும்.
72. பிறவிப்பிணி தீரும்.                             
73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம்.
75. விதியை வெல்வார்கள்.
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
77. பகை அச்சம் நீங்கும்.
78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
79. அபிராமி அருள்பெறுவார்கள். 
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.                    
81. நன்னடத்தை உண்டாகும்.
82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
83. ஏவலர் பலர் உண்டாகும்.                                         
84. சங்கடங்கள் தீரும்.
85. துன்பங்கள் நீங்கும்.
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
89. யோக சித்தி பெறலாம்.
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
92. மனப்பக்குவம் உண்டாகும்.
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
95. மன உறுதி பெறும்.
96. எங்கும் பெருமை பெறலாம்.                      
97. புகழும் அறமும் வளரும்.
98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம்.
99. அருள் உணர்வு வளரும்.
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.

சொல்லடி அபிராமி

அபிராமி அந்தாதியை எவர் ஒருவர் மனம் உருக பாடுகிறாரோ அவருக்கு நிச்சயம் அபிராமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகம் வேண்டாம் 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை 
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே. 

என்ற பாடலில் துவங்கி..   

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே 

என்ற பாடலில் முதல் பாடலின் முதல் வார்த்தை இறுதிப் பாடலின் இறுதி வார்த்தையாக முடியுமாறு நூறு பாடல்களைப் பாடுகிறார். 

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே செய்து, பாழ்நரகக் 
குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடு என்ன கூட்டு இனியே? 

என்ற 79-ஆம் பாடலைப் பாடுகையில் அம்பிகைத் தன் காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய "தாடங்கம்" என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீச அது பூரண சந்திரனாகத் தோற்றமளிக்கிறது.

 தமிழ்த் திரையில் இக்காட்சியை அருமையாகப் படமெடுத்துள்ளனர். இக்காட்சியில் மேற் சொன்ன அபிராமி அந்தாதி பாடல்களுக்கு பதிலாகக் கவிஞர் கண்ணதாசன் அபிராமி அந்தாதியின் 

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே 

என்ற வேறொரு பாடலை முதல் பத்தியாகக் கொண்டு எழுதிய ஜனரஞ்சகமான பாடல் இடம் பெறுகிறது. 

அன்னையின் திருப்பெயரைச் சொல்லும் அப்பாடலும் அருமையானதே. 

சொல்லடி அபிராமி.

படம்: ஆதிபராசக்தி 
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் 
இசை: கே.வி. மஹாதேவன் 
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்



சொல்லடி அபிராமி

சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ? 
பதில் சொல்லடி அபிராமி வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ? 
பதில் சொல்லடி அபிராமி 
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
நிலவினைக் காட்டு உன் கண்ணாலே 

சொல்லடி அபிராமி 

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? 
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ? 

சொல்லடி அபிராமி 

வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென 
வாராயோ அருள் மழை தாராயோ?
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென 
வாராயோ அருள் மழை தாராயோ? 

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட 

வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென 
வாராயோ அருள் மழை தாராயோ? 

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு 
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் 
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ 

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்

          சில குறிப்புகளையும் திருக்கடையூர் அபிராமி தாயார் வரலாறு தெரிந்த சில பெரியவர்களிடமும் அடியேன் கேட்டு தெரிந்ததையும் படித்து தெரிந்ததையும் எனது வாசகர்களுக்காக பதிவிட்டுள்ளேன் 

அனைத்து புகழும் சிவனுக்கே அர்ப்பணம்

உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ
தர்மம் பெறுபவருக்கு கொடுப்பவர் சிவமாக  தெரிவார்...தர்மம் கொடுப்பவற்கு பெறுபவர் சிவமாக தெரிவார்...
அனைத்தையும் சிவமாக காண்போம்...


Popular posts from this blog

2025 ஆம் ஆண்டு ராசி பலன்கள்

ஆதி சிவயோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்